வலியோடு வாழும் வாழ்க்கை ..

2 Comments »


ரு ஞாயிற்றுக் கிழமை ,அவசரங்கள் ஏதுமற்ற காலைப் பொழுது ...முழிப்பு வந்த பின்னும் எழுந்திருக்க மனமற்று போர்வைக்குள் படுத்திடுந்தபடியே இருந்தாலும் மனம் முழுக்க வெறுப்பும் வேதனையும் மண்டிக் கிடக்கிறது . இது என்ன வாழ்க்கை ? எதற்காக இந்த ஓட்டம் ? யாருக்காக .. என ஆயிரம் கேள்விகள் சுத்தி சுழன்றடிக்கிறது ..பதில் சொல்ல முடியாத தனிமையின் வெறுமை ..

அறையில் சந்தடிகள் ஏதுமற்று இருக்கிறது ,பக்கத்து கடடிலில் சுதா இல்லை .அவள் இன்னும் இரவு வேலையில் இருந்து வரவில்லை ,குளியலறயில் இருந்து வரும் சினிமா பாடல் ஜெனிபரின் இருப்பை சத்தமாய் சொல்லுகிறது ...இவ்வளவு நேரத்தோடையா எழுந்து விட்டாள்? என நினைத்தபடி என் படுக்கையில் இருந்த படியே கைக் கணணியை ஆன் செய்கிறேன் , மெல்ல உயிர்ப்பெறும் திரையில் சலனமற்று படர்கிறது பார்வை .. இணையத்தின் தொடர்பு வருவதற்குள் இதயம் துடித்து எகிறி விழும் போல் இருக்கிறது..

அவசர அவசரமாக எம் தமிழ் செய்திகளின் மேல் மேயும் கண்கள் ..இன்றைய எறிகணை வீச்சுக்கு பலியானவர்களின் பெயர் விபரம் என்னும் எழுத்துக்களைக் கண்டதும் நடுங்கும் கைகளோடு அழுத்துகின்றேன்..
இரா.மகேந்திரன் (வயது 32),
செல்வராணி (வயது 52),
அ.சிறி (வயது 28),
சு.இராசதுரை (வயது 36),
சு.சோமசுந்தரம் (வயது 52),
ந.அருளம்மா (வயது 63),
ம.மகேஸ்வரி (வயது 24),
கே.சசிகலா (வயது 2)...
என நீண்டு கொண்டே போகும் பெயர்களை படித்து முடிக்கும் வரையில் ஒரு தடவை செத்து விடலாம் போல் தோன்றுகிறது ...

அப்படா யாரும் இல்லை ..ஒரு சின்ன பெருமூச்சு என்னையும் அறியாமல் வெளிவந்தது வெடிக்கிறது .. அடுத்து காயம் பட்டவர்களில் யாரும் இருக்கக் கூடாதே என வேண்டிய படி அவசரம் அவசரமாக இணைப்பை சொடுக்கும் முன் என்னையும் அறியாமல் கலங்குகிறது கண்கள் .

எதாவது நம்பிக்கை கீற்று தெரிந்து விடாதா என ஏங்கும் ஒவ்வொரு புலம் பெயர் ஈழத் தமிழனுக்கும் விடியல் என்னமோ இந்த இணையத்தில் வரும் செய்திகளில் தான் .. வானம் பார்க்கும் பூமி போல ஏக்கத்துடன் காத்திருக்கும் கொடுமை யாருக்கும் வரக் கூடாது .அடுத்த செய்திகளின் மேல் பார்வைகளை பதிய தொடங்க அழைப்புமணி அலறுகிறது .. வாசலில் தூக்க சோம்பலுடன் சுதா. "குட் மோர்னிங் ...உன்ன டிஸ்டப் பண்ணிவிட்டேனா ?" என சொல்லியபடி கைப்பையை எறிந்துவிட்டு படுக்கையில் சாய்கிறாள் .."அதெல்லாம் ஒன்றுமில்ல உள்ள வா " என்றபடி நான் கணனிக்கு முன் அமரவும் ஜெனிபார் வருவும் சரியாக இருந்தது . "அப்படி என்னதான் எப்ப பார்த்தாலும் நெட்ல இருகிரீயோ ? என்ன பாய் பிரண்ட் யாரும் கிடைச்சசா ?" என சொல்லவும் ,ஜெனிபார் அவளை முறைத்துக் கொண்டு "அறிவில்லையா உனக்கு ..நீதான் நேரம் காலம் இல்லாம அமெரிக்க டைம் ல வாழுகிறாய்,பக்கத்தில என்ன நடக்குது என தெரியாது உனக்கு என்றால் ,நம்ம ரூமுக்குள்ள என்ன நடக்குது என்று கூட தெரியாதா ?" எனத் திட்டியபடி என்னைப் பார்த்து "நீ தப்பா நினைக்காதே .." என்றாள்.துளிரும் கண்ணீரைப் அடக்கிக் கொண்டு சின்னப் புன்னகையை பதிலாய் தர .." ஒ சாரி டா ".. என்பவளுக்கு எதை நான் சொல்வது ?

பெற்றவர் ,உடன் பிறந்தவர் எங்க இருக்கினமோ ? உயிரோடு தான் இருக்கினமோ இல்லியோ எனக் கூட தெரியாது பைத்தியம் பிடிக்காத குறையாய் ஈழத்தில் உறவுகளை விட்டு புலம் பெயர்ந்தவர்களின் நிலைமை எம் எதிரிக்கு கூட வர கூடாது ..

அம்மா அப்பா என்ன செய்கினமோ ,எங்க இருகினமோ எதுவும் தெரியாது,கடைசியாய் கதைக்கும் போது கூட "இந்த மண்ணை விட்டு விட்டு எங்களால வர முடியாது பிள்ள .. நீ கவனமாய் இரு ,வடிவாக சாப்பிடு , ஒன்றையும் ஜோசிக்காத ...நாங்க பார்த்து இருப்பம்" என சொன்ன அம்மா ... இப்போது எங்கு இருக்கிறார் ? வேலை நிமித்தமாய் அயல் நாடு வாசத்தில் தனிமையில் கொடுமையை மறைக்க அறையை பகிர்ந்து கொண்ட நட்புக்கள் இவர்களிடம் என்ன சொல்லி புரியவைப்பேன் ?

என் இனம் ஊர் இழந்து ,உறவுகளைப் பிரிந்து , சொந்த நாடு இல்லாமல் அகதி என்னும் போர்வையில் அலைக்கழிந்து வாழ்வதை ... எப்படி புரிய வைப்பேன் ? கேட்டு ஊச்சுக் கொட்டி விட்டு , ஐந்தாவது நிமிடம் சினிமா நட்சத்திரத்தை சிலாகிக்கையில் ...புரியுமா இவர்களுக்கு எம் வலி ?


நித்தம் என்ன நடந்ததோ ,யாருக்கு என்ன ஆயிற்றோ என ஏங்கும் நிலைமை இவர்களுக்கு புரியாது ..நித்தம் செத்தவரில் யாரும் தெரிந்தவர், சொந்தங்கள் யாரும் இருந்திடக் கூடாது என பதறி , உடல் சிதறி கிடப்பவர்களில் அடையாளம் தேடும் கொடுமையை எப்படி சொல்லிடுவேன் ?

இரு துளி கண்ணீர் விழுந்து தெறிக்கையில் ,ஜெனிபர் , நான் சர்ச்க்கு போய் உனக்காக வேண்டுகிறேன் ,கவலைப் படாதே என சொல்லிச் செல்கிறாள் ..
உங்கள் மன்றாட்டம் மட்டும் தீர்த்து விடுமா என்ன எல்லாவற்றையும் ? என நினைத்துக் கொண்டு அடுத்த வரியில் பாய்கிறது கண்கள் ...

2 Responses to "வலியோடு வாழும் வாழ்க்கை .."

Rajah Says :
April 29, 2009 at 7:21 AM

வலியில்லாத வாழ்க்கை இல்லை.. ஆனால் எமது வாழ்க்கையே வலியானது எனோ...........?

நன்றி

மனதின் கிறுக்கல்கள் Says :
October 18, 2012 at 11:43 AM

வலிகள் வாழ்வைத் தரும், ஆனால்வலிகள் தரும் தனிமை ஒருபோதும் துணிவைத் தருவதில்லை
துணிவோடு வாழப் பழகுவோம்..

எழுத்து சிறப்புற பயணிக்கிறது, ஆனால் புதிய பதிவுகள் எதுவும் இணைப்பில் வரவில்லையே முயற்சி செய்யுங்கள்..
வாய்கள் பேசாத வாரத்தைகளை உங்கள் வரிகள் பேசட்டும்
வாழ்த்துகள்

Post a Comment