அவலத்தின் மத்தியில் ...

2 Comments »

விரீட்டு அழும் குழந்தையின் சத்தத்தால் பால் புட்டியை தேடிக் கொண்டிருந்த அமுதா, பொருட்கள் சிதற ஓடி வந்தாள் ...அதற்குள் ஏணையை அப்பாச்சி
ஆட்டத் தொடக்கி இருந்தார் .

"ஏன் பிள்ளை இவனுக்கு இன்னும் பால் குடுக்கவில்லையா ? "
இதோ அப்பாச்சி , சுடுதண்ணீ வைத்திருக்கிறன், இந்த ஈர விறகில புகைந்து கொண்டிருகிறது அடுப்பு... இந்த பால் புட்டிய எந்த பையில் வைச்சன் என்று ஜாபகம் வருகுதில்ல .. தேடுறன் ,அவனை ஒருக்கா பாருங்கோ ...

சரி பிள்ள , அவசரப் படாம பாரு ... என்று சொல்லிக் கொண்டு ஏணையிலிருந்து குழந்தையை எடுத்து மடியில் ஆட்டிக் கொண்டே தன் வெற்றிலை உரலை இடிக்கத் தொடங்கினார் ...

கிழவியின் அருகாமையும் , மரக் காற்றும் , குழந்தையை கொஞ்சம் சாந்தப் படுத்தியதோ என்னமோ , கொஞ்ச நேரம் அழுகையை மறந்து கிடந்தான் ..
தற்காலிகமாக இந்த மரத்தடியில் தரப்பாளைக் கொண்டு ஒரு இருப்பிடம் அமைத்து , மரத்திலையே ஒரு ஏணை கட்டி இருந்தாலும் மழையின் ஈரம் இன்னும் காயாததால் சேரும் சகதியுமாய் கிடக்கிறது நிலம் ...

பிள்ள இவன் குமார் என்ன போனவன் ?
'பங்கர்'குள்ள வெள்ளம் போய் தண்ணீ கணுக்கால் அளவிற்கு நிக்குது .. இவனிட்ட சொல்லி அதை வெளியில அள்ளி ஊத்த சொல்லு பிள்ள ...அந்தரம் ஆபத்துக்கு என்ன செய்கிறது ...
இவர் கடைக்கு போனவர் அப்பாச்சி...
பிள்ளைக்கு பால் பவுடர் முடியப் போகுது ..எங்காவது கிடைக்குமா எனப் பார்க்க போனவர் எனச் சொல்லிக் கொண்டிருக்க குமார் வரவும் சரியாக இருந்தது...

'இவருக்கு ஆயுசு நூறு தான்'..இதோ வரார் ..நீங்களே சொல்லுங்கோ .. என திரும்பி ,கட்டி வைத்திருந்த பொருட்கள் ஒவ்வொன்றாய் பிரிக்க தொடங்கினாள் அமுதா.
அத ஏனப்பா கலைகிற ...எப்ப வேணுமேன்டலும் ஓடனும் ..நீ பாட்டுக்கு எல்லாத்தையும் பிரிச்சு போட்டிருக்கிற...

இவனின்ட பால் புட்டிய எங்கயோ வைச்சிட்டன்.. அத தான் தேடுறன்.. நீங்க ஒருக்கா பாருங்களேன், நான் அடுப்பை ஒருக்கா பார்க்க ...

சரி நான் பாக்கிறன் நீ போ ...குழந்தையின்ர முக்கியமான சாமான்களை ஒரு பையில போட்டு வையேன்... எனச் சொல்லிக் கொண்டு பிரித்த பொருட்களை கட்டிக் கொண்டே தேட தொடங்கினான் ..

ஆமா ..அடிக்கிற 'ஷெல்' க பார்த்துப் பார்த்து கட்ட எங்க நேரம் ,எல்லாத்தையும் அள்ளிப் போடத்தான்சரியாயிருந்தது , நீங்க வேற ஊர் வேலை பாக்க போயிருவிங்க ,நானும் அப்பாச்சியும் தனிய என்ன செய்யிறது ...

சரி சரி புலம்பாத ...நான் பார்கிறன்...

என்ன தம்பி ! ஆஸ்பத்திரி பக்கம் போனீங்க போல ... எனச் சொல்லிக் கொண்டே கந்தையா அண்ணை சைக்கிளிலிருந்து இறங்கி அதை மரத்தில் சாத்தினார் ..
'ஓம்' அண்ணை , வாங்கோ ... நம்ம கதிரேசனோட தென்னக் காணியில தானே நேத்து கிபீர் போட்ட குண்டுகள் விழுந்தது ..அதில இருந்த சனங்கள் பாவங்கள் .. ஒரு வீட்டில அப்ப தான் சாப்பிட இருந்திருக்குதுகள் , இரண்டு பொம்பிள்ளைப் பிள்ளையள் செத்திட்டுதுகள் ...தாய்க்காரி நல்ல காயம் ... ரத்தம் தேடிக் கொண்டு இருந்தார்கள் அதுதான் குடுத்து விட்டு வந்தனான் ...


படுபாவி!நேரம் காலம் இல்லையா இவனுக்கு .. எவள் பெத்துவிட்டாளோ இங்க வந்து எங்க தலையில குண்டு போட்டு தள்ளுகிறான் ..எங்கட குஞ்சு குருமான்கள் எல்லாம் அநியாயமா கொண்டு தள்ளுரானே ..என சபித்துக் கொண்டு ஈர மண்ணை அள்ளி எறிந்தார் அப்பாச்சி ..

என்ன செய்கிறது அப்பச்சி ,நாம தான் தமிழனா பிறந்திட்டமே ...அது போதாதா எங்கிட உயிர் சல்லிக் காசுக்கு பெறுமதி இல்ல எண்டு நினைச்சுப் போட்டங்கள் ...ஆளாளுக்கு அள்ளி குடுக்கினம் ஆயுதத்தை .. எங்கள கொல்ல... இப்ப புதுசா ' கிளஸ்ரர்' குண்டு என்று சொல்லி கொத்துக் கொத்தாய் கொட்டுறான் என கந்தையா அண்ணரும் சொல்லிக் கொண்டு ,நான் போகப் போறான் என எழுந்திருக்க ..
இருங்கோ அண்ணா ,தேத்தண்ணீ குடிச்சிட்டு போகலாம் ..என அமுதா சொல்லிக் கொண்டு வந்தாள்..
இல்ல பிள்ள ,காணேல என்று மனுசி தேடத் தொடங்கிடுவா ..நான் பிறகு வாறன் ... வாறன் அப்பாச்சி என்று கிளம்பினார்..

இந்த சனியன் பிடிப்பாங்களுக்கு எவன் அள்ளிக் குடுக்கிறான் ...அவங்கள் எல்லாம் பிள்ளை குட்டி பெத்தவங்கள் தானே ... பாவிங்க ... ஒரு நிமிஷம் நினைச்சு பார்த்திருப்பங்களா செத்துக் கிடக்கிற உயிர்களை எனப் புலம்பிக் கொண்டே பாக்கு உரலை இடிக்கத் தொடங்கினார் .

கொஞ்ச நேர தேடலுக்கு பின் பால் புட்டியோடு குமார் வர ...கடையில எதாவது கிடைச்சுதாங்க ... அரிசி ,பருப்பு எதுவும் இல்ல .. எனக் சொல்லிக் கொண்டு தேநீர் குடுவையுடன் வந்தாள் அமுதா.
நான் போய் பார்த்துவிட்டு வாறன் ..நீ பிள்ளைக்கு பாலைக் குடு! எனக் கிளம்பிய குமாரை கண் மறையும் மட்டும் நின்று பார்த்துக் கொண்டு நின்றாள் அமுதா .

சிறிது நேரத்தில் 'ஷெல்' அடிக்கும் சத்தம் கேக்கத் தொடங்கியது ..
அப்பாச்சி ! நீங்க இவனைக் துக்கிக் கொண்டு 'பாங்கருக்க 'போங்கோ ..நான் பால் எடுத்துக் கொண்டு வாறன் .. எனச் சொல்லிக் முடிக்கும் முதல் விழுந்து வெடித்தது அடுத்தடுத்ததாய் இரண்டு 'ஷெல்'கள்..
சிதறிக் கிடக்கும் பொருட்களோடு , அப்பாச்சியின் பாக்கு உரல் சதை துண்டுகளோடு இரத்தத்தில் உறைந்து கிடக்க...சூட்டில் கருகிய பால் புட்டியோடு பிய்ந்து போன ஒற்றைக் கை , அது அமுதா தான் என உறுதிப் படுத்தியது ..குழந்தையற்ற ஏணை கந்தக நெடி வீசும் காற்றில் இன்னும் அசைந்து கொண்டிருக்கிறது .. ..


2 Responses to "அவலத்தின் மத்தியில் ..."

M.Rishan Shareef Says :
January 17, 2009 at 8:18 AM

சிறுகதையெனச் சொல்லி ஒர் எல்லைக்குள் குறுக்கிவிட முடியவில்லை. காலங்காலமாகத் தொடர்ந்துவரும் துயரத்தின் பேருண்மைகளைச் சொல்லும் நிஜ நிகழ்வெனச் சொல்லலாம். அருமையான வட்டார மொழிநடையில் விவரிப்பு சிறப்பு. நன்றாக எழுதுகிறீர்கள் சினேகிதி. தொடருங்கள் !

Sakthy Says :
February 9, 2009 at 6:33 AM

நன்றிகள் ரிஷான் உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் ..

Post a Comment