" பூக்குட்டி "

6 Comments »

மெதுவா வாங்க.எங்க பூக்குட்டி தூங்குகிறாள்.உங்க காலடிச் சத்தமோ , முச்சுக் காற்று சத்தம் கூட அவளை எழுப்பி விடக் கூடாது .. ஏனென்றால் அவள் துங்குவது ரொம்பக் குறைவு ..தூக்கத்தில் கூட எதாவது குருவியோடையோ இல்ல காயம் பட்ட நாய்க்குட்டியோடையோ கதைத்துக் கொண்டிருப்பாள் .இப்பதான் தூங்க தொடக்கி இருக்கிறாள் .. தப்பா நினைக்காதிங்க ...

கொஞ்சம் இருங்க , எனக்கு இருந்த மரக் காலோட கெதியா நடக்க ஏலாது..இந்த பக்கம் வாங்க ..உங்களுக்கு நிறையக் காண்பிக்கணும் நான் ..இதோ இது தான் எங்க பூக்குட்டிக்கு ரொம்ப பிடிச்ச ரோஜா செடி .எப்பவுமே இதோட கதைப்பாள் .அதுவும் தலையாடி தன்னோட கதைப்பதாக சொல்லிக் கொண்டிருப்பாள்.அதோ அந்த செடியில இருக்கிற வண்ணாத்துப்பூச்சி கூட அவளோட பெஸ்ட் பிரன்ட் தான்.
இத மரம் இருக்கே இது அவளோட பிறந்த நாளுக்கு நான்
அவள் கை தொட்டு வைச்ச மரம் ,எவ்வளவு பெரிசா வளந்திட்டுது..என்ன இன்னும் ஒரு பூக்கூட பூக்க காணோம் ..
இந்தோ பாருங்க இது தான் எங்க பூக்குட்டியோட சைக்கிள் ..அவள் ஆசை ஆசையா இந்த முற்றம் முழுக்க ஓடின இடம் இது ..அவள் ஓட பின்னாலேயே ஜிம்மியும் ஓடும் ..ஜிம்மி யாரா ? பூக்குட்டியோட குட்டி நாய்க்குட்டி. அவளுக்கு அது என்றால் உயிர் . அதுவும் தான் ,எப்பவுமே அவள் கூடவே திரியும் ..சொன்ன நம்ப மாட்டிங்க ..அவ நேர்சரி போனப்போ அதுவும் கூடவே போனது தெரியுமா?

ம்ம்ம் என்ன கேட்டிங்க ...இல்லங்க பூக்குட்டி நாங்க செல்லமா கூப்பிடுறது, ஏனென்றால் அவ எப்பவுமே இந்தப் பூக்களோடதான் இருப்பாள் ..அவ நியப் பெயர் பூஜா ... அவளைப் பத்தி இன்னும் சொல்லணுமா... நான் எத்தனை வருசமானாலும் சொல்லுவேங்க ...அவ்வளவு சொல்லலாம் ... எங்க பூக்குட்டிக்கு எல்லாமே பிடிக்கும், பிடிக்காதது எதுவுமே இல்ல,ஆறு வயசுக் குழந்தைக்கே உரிய அத்தனை குறும்பும் செய்வா , ஆனால் அதையும் மீறி அவளிடம் எதோ ஒன்று அதிகமாகவே இருக்கும்.

இந்த வீட்டோட தேவதை பூக்குட்டி அழகான ஓவியம் போல அத்தனை அழகு..எல்லாமே ஆச்சர்யம் அவளுக்கு ..ஆயிரம் கேள்விகள் வைத்திருப்பாள் . தாத்தா தாத்தா என்று என்னோடவே திரிவாள் .அவளோட ஒவ்வொரு அசைவும் அவ்வளவு அழகாக இருக்கும் ,தன் சின்ன கண்ணால நிறைய கதைப்பாள் ..எல்லோரையுமே பிடிக்கும் அவளுக்கு...எப்பவுமே முகத்தில சிரிப்பு இருக்கும் ..அழுதா கூட சிரிக்கிற மாதிரியே தான் இருக்கும் ...

அவளுக்கு எல்லாமே பிடிக்கும் ..மழை ,வானவில்,நிலா ,பூக்கள் ..எல்லாமே ..ஏன் செத்து போன எலிக்காக சாபிடமேயே கிடந்தாள் ,அது பாவம் என்று.சில நாள் கொட்டக் கொட்ட முழிச்சு இருப்பாள் ...நிலா பாவம் தனிய இருக்குது என்று சொல்லி,நாங்க தான் நட்சத்திரங்களைக் காட்டி சமாளிப்போம் .

ம்ம் பூக்குட்டிக்கு என்னச்சா ?.. ம்ம் அதையும் சொல்ல வைச்சிட்டுது இருந்த பாழப் போன யுத்தம் ..எப்பவும் போலத்தான் அண்டைக்கும் .. இதே முற்றத்தில இருந்து விளையாடி , நிலாவோட கதைத்து விட்டு,வழமைய விடக் கூடுதலாகவே நிறைய கேள்விகள் கேட்டு அடம்பிடித்து படுக்க போனால்.. பிறகு நாங்களும் கொஞ்ச நேரத்தில நித்திரைக்கு போய்விட்டோம் .. பாவி வந்து கொட்டி விட்டான் குண்டுகளை ...விமானச் சத்தம் கேட்டு எழும்பி வெளிய வாறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுது ... கொஞ்ச நேரத்தில கண் முழிச்சு எழும்ப பாக்கிறன் ,முடியல ..கால் பிஞ்சு போய்க் கிடக்கு .. இழுத்துக் கொண்டே பார்த்தால் எல்லாம் எரிஞ்சு கொண்டு இருக்குது .. என்ற பிள்ளயள் கண்டு பிடிக்க ஏலாத அளவுக்கு சிதைந்து போய்க் கிடக்கினம், என்ற பூக்குட்டி கட்டில்ல அப்படியே கிடக்கிறாள்.. என்ற செல்லத்துக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று போய் தூக்கிறன் ,இந்தக் கையெல்லாம் இரத்தம் ..அப்பவும் அவள் முகத்தில சிரிப்பு இருந்தது.. என் கண்ணுக்குள்ளேயே இப்பவும் தெரியுது ..என் கைய முகந்து பாருங்க ..என் பூக்குட்டியோட ரத்தம் ...

அவளுக்கு பிடிச்ச இருந்த தோட்டத்திலேயே அவளை புதைத்தேன் .. சொல்ல மறந்திட்டன் அவளுக்கு பக்கத்தில ஒரு மேடு பார்த்திங்களே ..அது ஜிம்மிய புதைத்த இடம் ... அதுவும் அவளோடவே போய் விட்டது ... இப்ப இரண்டு பேருமாக நிலாவுக்கு துணையிருப்பாங்க...பாவி பய நான் மட்டும் உயிரோட கிடக்கிறேன் ..இருந்த தோட்டத்துக்கும் ,பூக்குட்டிக்கும் காவலாய் மிச்சக் காலத்தையும் ஓட்டிடுவன்.. சரி உங்களுக்கு நேரமாகி இருக்கும் ...கவனமா போங்கோ ...

ஒரு நிமிசம் ,சத்தம் போடாம போங்க..ஏனென்றால் எங்க நாட்டில என் பூக்குட்டி மாதிரி நிறையப் பேர் .. தூங்கிக் கொண்டிருக்கினம் ... கவனமா பார்த்துப் போங்க ..

6 Responses to "" பூக்குட்டி ""

shaam Says :
December 15, 2008 at 9:41 PM

Really heart touching but its not a story u posted here . I think its the thng u faced in ur life and ur country facing even today.
keep it up

M.Rishan Shareef Says :
December 21, 2008 at 11:32 AM

அருமையான சிறுகதை. மனதைச் சுடும் உண்மையை இலகுநடையில் வாசகர்களுக்குக் கொண்டுசெல்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் சினேகிதி !

Sakthy Says :
December 25, 2008 at 11:06 PM

நன்றிகள் தோழரே உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் ..

Sakthy Says :
December 25, 2008 at 11:07 PM

அன்பின் ரிஷான் ,

//அருமையான சிறுகதை. மனதைச் சுடும் உண்மையை இலகுநடையில் வாசகர்களுக்குக் கொண்டுசெல்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் சினேகிதி !//

நன்றிகள் தோழரே உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் ..

Sakthy Says :
December 25, 2008 at 11:08 PM

வருகைக்கு நன்றிகள் சந்தனமுல்லை ..

Post a Comment