" கண்ணம்மா என்னும் அழகி "

0 Comments »

மொட்டைமாடிக் காற்றின் சிலுசிலுப்பில் கையில் இருந்த புத்தகத்தைக் கூட மறந்து மலை நேர மேகக் கூட்டங்களை ரசித்துக் கொண்டிருந்தேன். இந்த வானத்தில் தான் எத்தனை வர்ணங்கள் .. ஒவ்வொரு மேகக் கூட்டமும் ஏதேதோ உருவத்தோடு, இயற்கையின் படைப்புத்தான் எவ்வளவு அழகு ..பார்க்க பார்க்க சலிக்காது எனக்கு.. இன்றும் அப்படித்தான் நேரம் போவதே தெரியாமல் நின்ற என்னை .."ஐயோ அம்மா ... அடிக்காதிங்க அடிக்காதிங்க.. என்னும் பெண் குரலும் ... சிறு குழந்தையின் அழுகையும் இவ்வுலகத்திற்கு இழுத்து வந்தது..

எமது குடியிருப்பிலா இப்படிச் சத்தம் ... ஆச்சரியமாக இருக்கிறதே ..

ஏனென்றால் தொடர் வீடுகளைக் கொண்ட நாகரீக மக்கள் வாழும் அப்பார்மென்ட் இது .. பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் பெயர் கூடத் தெரியாத , நுனி நாக்கு ஆங்கிலத்தில் வாழ்க்கையை ஓட்டும் சென்னையின் உயர்ந்த மட்டத்தார் வசிக்கும் இடம் ..இங்கு இப்படி ஒரு குரலா... அவசரமாய் எட்டிப் பார்த்தேன் .. பக்கத்து காலி இடத்தில் புதிய கட்டிடம் ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன ... அந்த இடத்தில் ஒரு சிறு குடிசை ... அதில் தான் இந்த சத்தம் ... வாட்ச்மேன் போய் எதோ பேசுவது தெரிந்தது ,அதற்கு பின் சத்தம் ஏதுமில்லாமல் அமைதியானது...

எம் வீட்டு வேலைக்காரி செண்பகம் காலையில் வந்தால் இந்த அப்பார்மென்ட் செய்தியெல்லாம் ஒரு வரி விட்டாமல் சொல்லி விட்டுத்தான் தான் வேலையைப் பார்க்க போவாள் ..என் பாட்டிக்கு செண்பகம் வராவிட்டால் தலை வெடித்து விடும் ... என்னதான் அடுத்த வீட்டார் பெயர் தெரியாவிட்டாலும் ,அடுத்த வீட்டு விஷயம் தெரிந்து கொள்ள ஆவல் விடாது தானே ...

பத்திரிக்கை ஒன்றைப் புரட்டியபடி .. நானும் செண்பகத்தின் வார்த்தைகளில் தொலைந்து கொண்டிருந்தேன் ..அந்த பெண்ணின் பெயர் 'கண்ணம்மா' வாம் ... அவள் கணவன் இந்த புது கட்டிடத் பகுதியில் வேலை செய்பவனாம்... அதோடு இந்த பொருட்களுக்கு காவலாய் குடிசை போட்டு இங்கே தங்கி இருகிறார்களாம் .. ஒரு குழந்தையோடு....

'அம்மா நேத்திக்கு பூரா ,எல்லா வீட்டிலையும் இந்த கண்ணம்மா பத்திதாம்மா ஒரே பேச்சு ...ஒரே சத்தம் என்று கம்பளைண்டாம் ... 'என்று சொல்லிக் கொண்டிருந்தாள் ..

குடிகார புருசனின் அடியும் , கண்ணம்மாவின் சத்தமும் அடிக்கடி கேக்கத் தொடங்கியதும் , அதை வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கை ஆகிவிட்டது எமக்கு ....அவளின் குழந்தைக்கு ஒரு ஆறு வயசிருக்கும் , கறுப்பாய் துரு துறுவென்று இருப்பான் .அப்பார்மென்ட் குழந்தைகளுக்கு அவன் ஒரு வேடிக்கைப் பொருளாகி விட்டான் ...அவர்கள் இவனை விளையாட்டில் சேர்க்காததால் , அவர்களை ஓரமாக நின்று பார்ப்பதும் ,பின் தாயிடம் ஓடிச் செல்வதையும் பார்த்திருக்கிறேன் ..வறுமையின் அத்தனை அடையாளங்களோடு , அங்காங்கே ஓட்டுப் போட்ட புடவையுடன் கண்ணம்மா சுற்றி வருவது எம் குடியிருப்பு வாசிகளுக்கு முகச் சுழிப்பை ஏற்றிக் கொண்டிருந்தது..

அன்றும் அப்படித்தான் வழக்கம் போல ஒரு மாலை நேரம் .. அலுவலம் முடித்து திரும்புகையில் எதோ ஒரு புயல் அடித்து ஓய்ந்திருப்பது தெரிந்தது... வீட்டில் செண்பகத்தின் குரல் ..

என்ன துணிச்சல் தெரியுமாம்மா அந்தக் கண்ணம்மாவுக்கு ... என்று சொல்லிக் கொண்டிருந்தாள் ...
என்னாச்சு கண்ணம்மாவுக்கு... எனக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தேன் ..

அது வந்தும்ம்மா நம்ம பேங்க் ஆபிசர் பிள்ளை ...அது தாம்மா அந்த சந்தோஷ் தம்பி காலையில் துப்பரவு செய்ய திறந்து வைத்த சாக்கடை குழியில விழுந்து விட்டான் ...
ஐயய்யோ என்னாச்சு .....அவனுக்கு ஒன்னும் இல்லையே ...
பையனுக்கு ஒன்னும் இல்லம்மா எல்லாம் அந்தக் கருமாரி அம்மா தான் கண்ணம்மா உருவத்தில வந்து காப்பாத்தி இருக்கா...

சரி சொல்லு என்னாச்சு என்றேன் படபடப்போடு ...


நம்ம பசங்க எல்லாம் விளையாடிக் கொண்டிருக்க பந்து அந்தக் குழியில , விழுந்திட்டுதாம், அப்ப அதை எடுக்கப் போன சந்தோஷ் அந்தக் சாக்கடையில விழுந்திட்டானாம் .அந்தக் கண்ணம்மா பையன் இருக்கானில்ல அவன் சந்தோஷோட கையைப் பிடித்துக் கொண்டு கத்தி இருக்கான் ,அவன் சத்தத்தைக் கேட்டுக் எல்லோரும் ஓடி வந்திருக்காங்க , அதுக்குள்ள அவன் கையில இருந்து நழுவி விழுந்திட்டன் கீழே...
எல்லோரும் வாட்ச்மனைக் கூப்பிடு, போலிசுக்கு போன் செய் எடு சொல்லிக் கொண்டிருக்க ... கண்ணம்மா தான் ஓடி வந்தா பாருங்க... அப்படி ஒரு ஓட்டம் ...தான் பிள்ளையோட சத்தத்தைக் கேட்டு ஓடி வந்தவ ... சாக்கடையில இறங்கிவிட்டா ...பத்து ,பதினைந்து நிமிசம் இருக்கும் , அதுக்கு பிறகுதான் வாட்ச்மனே ஓடி வந்தான் ...
பிள்ளைய பிடிச்சுக் கொண்டு மேல வந்து பர பரவென்று துடைச்சு , மூச்சு குடுத்த பாருங்க , அவனும் அப்பத்தான் கண்ணைத் திறந்தான் ... எல்லோருக்கும் மூச்சே வந்துசும்மா ...
என்னதான் பதை பதைத்தாலும் யாரும் பக்கத்தில போக அருவருத்துக் கொண்டிருக்க ..அவளே தண்ணீர் மெண்டு வந்து குளிப்படி விட்டாள் பாருங்க ...அதுக்கு பிறகு தான் அவன் அம்மாகிட்டயே போனான் ...எல்லோரும் கண்ணம்மாவை புகழ , அவள் தான் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு ஒண்ணுமே நடக்காது போல சிரிச்சுக் கொண்டு போய்விட்டாள்....
அந்தக் கருமாரி அம்மனே நேரில பார்த்த மாதிரி இருந்துச்சும்மா அவளைப் பார்க்க ...
ம்ம் ... கண்ணம்மா இஸ் ரியலி கிரேட் தான் ...
என்ன அவளைப் பார்த்து முகச் சுழிப்பவர்கள் ,நாளையிலிருந்து புன்னகைக்க கூடும் ... நாளை அந்தக் குழந்தைகளோடு கண்ணம்மாவின் குழந்தையும் விளையாடலாம் .நாம் தான் அடிக்கடி மாற்றுகிறோம் எம் குணத்தை , வசதிக்கு , புகழுக்கு , பெருமைக்கு என ...
அவள் எப்பவுமே இப்படி தான் இருக்கக் கூடும் ...
அதனால அவளுக்கு ஒண்டும் பெரிதாய் வித்தியாசம் இருக்காது ...
என்று சொல்லிக் கொண்டு நான் அறைக்குள் நுழைந்தேன் .. கண்ணம்மா அதே வறுமையின் கோடுகளோடு இருந்தாலும் ,இன்று என் கண்ணுக்கு பேரழகியாய் தெரிந்தாள்..

0 Responses to "" கண்ணம்மா என்னும் அழகி ""

Post a Comment