நினைவுகளின் பிடியில் ..

1 Comments »

விடிய எழும்பினத்தில் இருந்து ,மாடியில் இருந்து எப்போதும் வரும் அப்பையாண்ணையின் சத்தத்தை காணவில்லையே என ஜோசித்தபடி அம்மாவிடம் "என்னமா அப்பையாண்ணை என்னும் எழும்பவில்ல போல ... சத்தத்தையே காணோம் ? எனக் கேட்டேன் தேத்தண்ணியை குடித்தபடி ...

"நீ கும்பகர்ணன் மாதிரி கிடப்ப .. இரவு என்ன நடந்து தெரியுமே பிள்ள ..அவருக்கு ஏலாம போயிட்டுது. இங்க அக்கம் பக்கத்தில இருக்கிற எல்லோரும் சேர்ந்து தான் ஆஸ்பத்திரியில சேர்த்தது .. "

"ஐயோ ஏனம்மா என்னை எழுப்பி இருக்கலாம் தானே .. பாவம் தனிய அங்க என்ன செய்கினமோ ... நான் போகட்டே ...? "

"வேண்டம் பிள்ள ... அண்ணை இராத்திரி அவரோடதான் போனவன் .. அவன் அங்க நிக்கிறான் தானே ...நான் அப்பாட்ட சாப்பாடு குடுத்து விடுறன் ..நீ படிக்கப் போ .. " என சொல்லியபடி சமையல் வேலையில் மும்மரமானார் .

கல்லூரிக்கு வெளிக்கிட்டு போனாலும் அப்பையான்னையின் நினைவுகள் துரத்திக் கொண்டு இருந்தன ..

பாவம் அப்பையாண்ணை .. 70 வயசு இருக்கும் ...
அம்மா ,அப்பா அப்பையாண்ணை என கூப்பிட நாங்களும் அப்படியேதான் கூப்பிடுறதும் .. தூரத்து சொந்தமாம் அப்பாவுக்கு ..
நல்ல வசதியாய் காணி ,பூமி என்று வாழ்ந்தவராம் .. நாங்க இங்கால வெளிக்கிட அவர் தான் மண்ணை விட்டு விட்டு வர மாட்டன் என்று இருந்த மனுசனாம் ... நாங்க சின்ன பிள்ளையள இருக்கேகிள்ள அம்மா,அப்பாவுக்கு நிறைய உதவி செய்தவராம் ...

"செய் நன்றி மறக்க கூடாது ,அந்த மனுஷன் செய்த உதவிகளுக்கு நாம கடன் பட்டு இருக்கிறம் " என அம்மா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன் . அவர் மகன் "அவரையும் ,அவர் மனைவியையும் வெளியில் எடுக்கப் போவதாயும் ,அதுவரை அவர்களை பார்த்துக் கொள்ள முடியுமா ?" என கேட்ட நாளில் இருந்து,அம்மாவின் சந்தோசத்தால் அவரைப் பார்க்க வேணும் என ஆவல் கூடி இருந்தது எங்களுக்கு .

அவர் வந்த போது அவரைப் பார்த்து அம்மா அழுது விட்டா ..பிறகு ஏன் என்று நானும் ,அண்ணாவும் விசாரிக்க சொன்னா .. " ராஜா மாதிரி இருக்கும் மனுஷன் ..வெள்ளை வேட்டி சட்டையில ,பிரம்புப் பிடியோட நடப்பார் .. அந்த பிரம்பு சத்தமே எதோ தேர்பூட்டி வாற ராஜா மாதிரி தான் இருக்கும். எத்தனை வேலை ஆள் அவர் தோட்டத்தில இருப்பினம் தெரியுமே ..அவர் துப்பாக்கி எல்லாம் வைத்து இருந்தவர் , வேட்டைக்கு போனா எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம் தான் ,மான் கறி ,பண்டிக்கறி எல்லாம் கொண்டு வந்து தருவார் .. நல்ல மனுஷன் . உதவி என்று போன ,வெறும் கையோட திருப்பி அனுப்பாது .. அவற்ற பொஞ்சாதி மட்டும் என்ன குறைச்சலே .. பெயர் மாதிரியே குணமும் தங்கம் ..எப்பவும் நாலு படி அரிசி கூட வேகுமாம் ... வாறவங்களுக்கு சாப்பாடு போட ,இப்ப பார் எழும்பும் தோலுமாய் இந்த கோலத்தில பார்க்க என்னையும் அறியாமல் கண்ணீர் வந்திட்டுது.." எனச் சொல்லிக் கொண்டு எழுந்து போனார் .. அதுக்கு பிறகு எங்களுக்கும் நல்ல மரியாதையை வந்திட்டுது அவர் மேல ...

அவர் ஊரில நடந்தது, 'காம்ப்'நடந்த கொடுமைகள் எல்லாம் சொல்ல சொல்ல அழுகை வரும் .. கடைசி நேரத்தில சனத்தோட சனமா அள்ளுப் பட்டது சொல்லும் போது ,குரல் தழுதழுக்க மேல சொல்ல முடியாமல் கஷ்டப் படுவார், நானும் அவரா மேல சொல்லட்டும் எனப் பார்த்து விட்டு,நேரம் போக எழும்பி வருவன்.

எங்கயோ வெறித்துப் பார்த்தபடி இருக்கும் நேரங்களில் கண்கள் கசிந்து இருப்பதை பார்த்து இருக்கிறன் ..அம்மாவிடம் சொன்ன போது "பாவம்டி எப்படி எல்லாம் இருந்த மனுஷன் .. எல்லாத்தயும் இழந்து போட்டு வாறது ஏன்டா எவ்வளவு கஷ்டம் .. நீ போய் எதுவும் கதைத்துக் கொண்டு இரு "என சொல்லி அனுப்புவா ..

ஆனால் கொஞ்ச நாளாவே அவர் கதை குறைய தொடங்கியது .. எப்போதும் வாயிக்குள் எதோ முணுமுணுத்த படி .... கண்கள் அலைக்கழிய ,முகட்டு விட்டத்தை வெறித்தபடி , எதோ சொல்ல முடியாமல் அவர் படும் அவஸ்தை பார்க்க கஸ்ரமாக இருக்கும் ..அப்பா எவ்வளவோ கதை குடுத்தும் அவர் நினைவுகள் ஒரு இடத்தில் இருந்து திரும்பி வராதது போல தனக்குள்ளேயே கதைக்க தொடங்கினார் .

அவர் சொல்லாது விட்ட கதைகளை அவர் மனைவியிடம் போய் கேட்போம்.அவா அழுது
கொண்டுதான் சொல்லுவா .
கடைசி நேரத்தில அத்தனை குண்டுக்கும் ,ஷெல் அடிக்கும் மத்தியில பதுங்குகுழிதான் எந்நேரமும் ..
சுத்தி வர எங்க பார்த்தாலும் பிணக்காடாம்.. எங்க பார்த்தாலும் ரத்த வெள்ளமாம் . செத்தவர் , காயம் பட்டவர் எல்லாம் வழி நெடுக்க கிடந்தவினமாம் ,எங்க பார்த்தாலும் ஒரே அலறல் சத்தமாம் ..
சரியான சாப்பாடோ , மருந்து வசதியோ இல்லையாம் ..
அதை கேட்டு விட்டு நான் இரவு முழுக்க அழுதனான் ... எத்தனை சின்ன பிள்ளைகள் இருந்து இருப்பினம் ? அவேள் எல்லாம் என்ன பாவம் செய்ததுகள்?

அப்பையாண்ணை கடைசி வரை தன்ர ஊர விட்டிட்டு வர மாட்டன் என்று இருந்தவராம் .. இவாதான் காலிலை விழுந்து அழுது கூட்டிக் கொண்டு வந்து இருக்கிறா . கடைசி நேரம் இவாக்கு காயம் பட்டு விட்டதாம் ..அதுக்கு பிறகுதான் சனங்களோட சேர்ந்து இராணுவப் பகுதிக்கு போக சம்மதித்தவராம் .

"நான் தப்பு செய்து போட்டேனே ... என்ர பரமேஸ்வரி என்னை மன்னிக்க மாட்டாள் ..
இந்த பாவிக்கு நரகம் தான்..."பாவம் அந்த சின்ன பிள்ளை ! இப்ப உயிரோட இருக்குதோ இல்ல ..எந்த நாய் நரி சாப்பிட்டுதுகள்ளோ தெரியல்லையே .. இந்தப் பாவிக்கு எப்படி மனம் வந்தது பார்த்து விட்டு விடு ஓடி வர.. இன்னும் நான் உயிரோட இருக்கனுமா ? எனக்கு நல்ல சாவே வராது ..." என்னும் புலம்பல் அடிக்கடி அவர் வாயில் இருந்து வரத் தொடங்கியது . அந்த நேரங்களில் அவர் மனைவி ,
" நீங்க என்னப்பா செய்விங்க ? என்னை கூட்டிக் கொண்டு வருவிங்களா ? இல்ல அவேளைப் பார்ப்பிங்களா ? அவேலுக்கு எதுவும் நடந்திருக்காது ... நீங்க யோசிக்கதிங்கோ .. " என சொல்லி அவரை தேற்றுவதை கண்டிருக்கிறேன் .

கல்லூரி முடிந்து வர ஆரவாரப் பட்டுக் கொண்டு இருந்தது வீடு...
"என்னம்மா என்னாச்சு ? அப்பையாண்ணை சுகம் தானே ?
"இல்ல பிள்ள அவருக்கு அங்க சுயநினைவு இல்லையாம்..அப்பா இப்ப தான் கதைத்தவர் .. ஆஸ்பத்திரியிலே தான். நீயும் வா ..போய் பார்த்து விட்டு வருவம் .. பாவம் அந்த மனுஷி ஒரே அழுது கொண்டு இருக்குதாம் " என சொல்ல அவசரமாக ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தோம் .

அறை வாசலில் அப்பா கவலையோடு நிற்கிறார் ."என்னப்பா என்னாச்சு?" என கேட்க ,அப்பவோ "அப்பையான்னைக்கு புத்தி பேதலிச்ச மாதிரி இருக்கு,யாரையும் நினைவு இல்ல ,இப்ப தான் டாக்டர் பார்த்து விட்டு போறார். தன் பாட்டுக்கு எதோ முணுமுணுத்துக் கொண்டு இருக்கிறார். அவா அழுது கொண்டு இருக்கிறா நீ போய் பார் " என அம்மாவை அனுப்பினார். நான் மெல்ல நகர்ந்து அப்பையாண்ணை படுத்து இருக்கும் அறையைக்குள் நுழைந்தேன் .கசக்கி போட்ட காகிதம் போல கட்டிலில் படுத்துக் கிடக்கும் அவரை பார்க்க முடியவில்லை. கண்ணின் ஓரமாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது .

கதைவை திறந்து கொண்டு வெளியே வர "யாருக்கும் எந்த தீங்கும் செய்ய நினைத்து பார்த்திருப்போமா ,எல்லோருக்கும் அள்ளி அள்ளி குடுத்த மனுஷனுக்கு எப்படி ஒரு நிலைமையா ?.. இப்படி எல்லாம் சீரழிய வேண்டி இருக்குதே! இதுக்கு அங்கேயே கிடந்தது செத்துப் போயிருக்கலாமே.." என்னும் குரல் அழுகையோடு வந்து கொண்டு இருந்தது ..

"கண்னுக்கு முன்னால ஒரு தாயுக்கு ஷெல் பட்டு நல்ல காயமாம், தவண்டபடியே "என்ர பிள்ளையையாவது காப்பாத்துங்கோ" ,எடுத்துக் கொண்டு போங்கோ" என்று கெஞ்சினவாவாம் ,இவர் அந்த நேர அவசரத்திலையும் , தன்ர மனுஷியை எப்படியாவது காப்பத்தனும் என்று அந்த பிள்ளைய அங்கேயே விட்டு விட்டு வந்திட்டாராம் .கேம்ப்ல வைச்சுத்தான் இதை பிறகு மனுஷிக்கு சொன்னவராம் .. அந்த கவலைதான் இப்ப அவரை பாடாப்படுத்துது போல ... "என அம்மாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தார் ..

அம்மாவின் ராஜா வேச அப்பையாண்ணை மெல்ல கலைந்து கொண்டு இருந்தார் எனக்குள் ... அந்த முகம் தெரியா குழந்தை தேவ தூதுவனைப் போல இப்போது அப்பையான்னையின் கட்டிலின் மேல் பறப்பதாக தேன்றியது....

இனி சத்தமாய் ஒலிக்கக் கூடும் , அந்த நான்கு சுவர்களுக்குள் அப்பையாண்ணையின் குரல் ..

வாங்க ஊருக்கு ...

1 Comments »

லகின் மிகப் பெரும் மக்கள் மீட்பு நடவடிக்கை முடிந்து பொங்கிப் பூரித்து நிற்கிறது என் நாடு . ஐந்து மாதத்தில் குறைந்தது 35000 மக்களைக் கொன்று புதைத்த மயான பூமியில் நின்று மாட்சிமை பொருந்திய ஜனாதிபதி ..வாங்க எல்லோரும் ஊருக்கு ..."வடக்கின் வசந்தம் " அழைக்கிறது .

கொத்துக் கொண்டுகளினாலும் ,பொஸ்பரஸ் குண்டின் சூட்டோடு காத்திருக்கிறது என் மண் ..காய்ந்து கருகிப் போன மரங்களும் ,கந்தக நொடி வீசும் காற்றும் உங்களை வரவேற்கும் . குருதி நனைந்து இறுகிய காணி நிலமெல்லாம் உங்கள் காலடி பட்டு அகலிகை விமோசனம் கிடைக்கட்டும் . கையினால் மண் வாரி குழிதோண்டி புதைத்த உடலங்களின் எலும்புகள் சிறு மழைக்கு நிமிர்ந்து நின்றால் அச்சம் வேண்டாம் ..அட இது என் உறவுக்காரன் தான் என்று சொல்லும் உறுதியோடு வாங்க ..


யுரோசிமாவில் அணுகுண்டு வீழ்ந்த இடத்தில் இன்னும் புல்லுக் கூட வளரவில்லையாம் ... இனி பெயரை மட்டுமே மாற்றி சொல்வோம் என் வீடு தோட்டத்திலும் எதுவும் முளைக்கவில்லை என்று பெருமையாய் ..மனித எச்சங்கள் வாழ்ந்த அடையாளம் சொல்லி தன் சுடுபட்ட உடம்போடு காத்திருக்கிறாள் அகிலம் காக்கும் ஆதிபராசக்தி உங்கள் சந்தனக் காப்புக்கு .. ஒன்று இரண்டு இருந்தால் ஆப்கானிஸ்தான் புத்தர் சிலை போல காட்சிக்கு வைக்கலாம் , நீங்களோ தெருவுக்கு தெருவல்லவா கோயில் கட்டி வைத்து இருக்கிறீர்கள் ..

குடியேற்ற திட்டம் எதுவும் இப்போது இல்லை ..இருங்கள்! சிங்கள சின்னங்கள் ,பெயர் பலகைகள் முதலில் வைக்க வேண்டும் நாம் .. பண்டார வன்னியன் அரண்மனை நிலம் எம் சிங்கள பூமி ,விகாரை ஒன்று கட்ட பூஜை போட வேண்டும் வெற்றி விழாக் கொண்டாட்டங்களில் பிக்குகள் இருப்பதால் ,நேரம் குறிக்கவில்லை இன்னும் ..... இருக்கவே இருக்குது மாவீரர் துயிலுமில்லக் கருங்கற்கள் எமக்கு ..

ஒரு நாடு இன்னொடு நாட்டின் மீது படையெடுத்த வெற்றிக் களிப்பில் இருக்கிறோம் நாம் ..ஏய் அங்கென்ன முணுமுணுப்பு..கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாய் பொத்தி வாழப் பழகு ..இனி யாரும் சத்தம் போட்டு பேசவோ,நாலு பேர் கூடி நிற்கவோ கூடாது ,இல்லை கண்டதும் சுட்டுத் தள்ளு தான் .. கவலை வேண்டாம் உங்களைக் காப்பதை தவிர வேறென்ன வேலை எமக்கு ... உலக நாடுகள் தந்த ஆயுதங்கள் சும்மா போட்டு வைக்கவா ? 'ஒன்னுக்கு' போவதுக்கு கூட அனுமதி வாங்கிச் செல்லுங்கள் .. இதுவும் உங்கள் பாதுகாப்பிற்கு தான் .


இனி சந்துக்கு சந்து எம் துப்பாக்கிகள் குறி பார்க்கும் உம்மை .. கவலை வேண்டாம் பயக்கரவாதி பயமற்று நீங்கள் நிலாச்சோறு சாப்பிடலாம் ..என்ன அவ்வப்போது சிகரெட் புகைக்கு உன் அடுப்படி நெருப்பும் ,குடித்து வெறிக்க உங்கள் "கற்பகதரு" கள்ளும் ,தொட்டுக்கொள்ள உன் தமிழ் பெண்ணும் வேண்டும் எமக்கு ..அவ்வளவு தான் .

விசாரணைக்கு என்று அழைப்போம் .வீடு புகுந்து உதைப்போம், கேட்க நாதியற்ற தமிழன் நீ ! கொஞ்சம் வலிமையாய் இருந்த போதே சொன்னோம் ,இது சிங்கள பூமி ஓடுங்கள் வேறு நாட்டுக்கு என்று ,இனி யாரும் சத்தமாய் மூச்சுக்கூட விடக் கூடாது.காந்தி பொம்பை போல் புலன்களை அடக்கக் கற்றுக் கொண்டு வாருங்கள் ..எது நடந்தாலும் ஜடமாய் வாழ வேண்டும் நீங்கள்.

காட்டிக் குடுக்க நாய்களும் ,சேர்ந்து ஓத வாய்களும் இருக்கும் போது இனி கரு கொண்ட குழந்தை கூட சுகந்திர நினைப்பு வரக்கூடாது .A9 பாதை திறப்போம் , யாழ்தேவியும் ஊர் வர வழி செய்வோம் , கூடவே சிங்கள காவலிகளும் காவலுக்கு வருவார்கள் . கலாச்சாரம் ,பண்பாடு என நிறைய கதைக்கிறீர்கள் ... இனி குட்டைப் பாவாடை பெண்ணுடன் பியர் போத்திலுடன் டிஸ்கொத்தே போக தடையில்லை ,கள்ளுக் கடைகள் வீதிக்கு வீதி திறக்கலாம் ..

சமத்துவம் நிறைய கதைத்தீர்கள் போல் முன்பு ... சாதி பெருமை சத்தமாய் பேசலாம் இனி ."நாவிதன் ","டோபி" எல்லோரையும் வீடுக்கு வர சொல்லி சேவகம் செய்ய சொல்லலாம் ..கீழ் சாதியை சரி சமனாய் பார்ப்பதா ? வாருங்கள் தமிழர்களே இவை எல்லாம் உங்களுக்காகத்தான் ..

கெட்டு சீரழிந்து கலப்பு இனம் உருவாக்க வாருங்கள் இளைய தலைமுறையே .. ,விடுதலை எண்ணம் துளியும் வராமல் பார்த்துக் கொள்ள நாங்கள் தயார் .


கேட்க ஆள் இருந்த போதே சொன்னோம் எம் வீரர்களுக்கு
" தமிழ் பெண்கள் உங்களுக்கு ,ஆண்கள் கடலுக்கு " என்று ..இனி ஒரு இராணுவ வீரன் ஒரு நாளுக்கு எத்தனை தமிழ் பெண்ணை தொட்டான் என புள்ளி விபரம் சேகரிக்கப் போகிறோம் .ஒரு கிருஷாந்திக்காக ஒலம் போட்ட உங்கள் வாய்கள் இனி எத்தனை தடவை திறக்கப் போகின்றன பார்க்கலாம் ?காணமல் போனவரை இனி தேட வேண்டியது இல்லை ,நேரே எம்மிடம் வாருங்கள் ..எந்த எந்த மலசல குழிகள் ,எந்தக் கிணறுகள் என நாமே காட்டுகிறோம் ,முடிந்தால் அடையாளம் கண்டு சொல்லிச் செல்லுங்கள் .

உன் பக்கத்து வீடுக்கு நாளை சிங்கள குடும்பங்கள் வரும் ..சேவகம் செய்து வாழப் பழகு .. கல்விக் கூடங்கள் ,அலுவலகங்கள் எல்லாம் எம்மவருக்கு ஒதுக்கி விட்டு ,கொஞ்சமாய் பிச்சை போடுவோம் .. சத்தம் போடமால் வங்கிக் கொள்.. இனி மேலும் விழுக்காடு புள்ளி விபரம் எல்லாம் சொல்லித் திரியாதே ...பெருபாண்மை ,சிறுபான்மை இனம் பற்றி எல்லாம் மறைவாய் பேசலாம் .. கொடுப்பதை வங்கிக் கொண்டு அடிமைகளாக இல்லை! இல்லை! ஒரே நாட்டின் சக குடிமகனாக வாழ வாருங்கள்!வரவேற்கிறது.


" வடக்கின் வசந்தம் ", ஒரு நிமிடம்! இத்தனையையும் பொறுத்துக் கொண்டு வாழ தயார் என்றால் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லி விட்டு வரலாம் ...
உம் பெயர் என்ன ?
" என்ன பிணமா?" ......... ஓ தமிழனா ..... ?


பின்குறிப்பு : இங்கு வருபவர்கள் கட்டாயம் சிங்களம் தெரிந்து கொண்டு , தமிழ் இன அடையாளங்களை ஒதுக்கி ,புலன்களை அடக்கி வந்தால் இன்னும் செளகரியம் ..

வலியோடு வாழும் வாழ்க்கை ..

2 Comments »


ரு ஞாயிற்றுக் கிழமை ,அவசரங்கள் ஏதுமற்ற காலைப் பொழுது ...முழிப்பு வந்த பின்னும் எழுந்திருக்க மனமற்று போர்வைக்குள் படுத்திடுந்தபடியே இருந்தாலும் மனம் முழுக்க வெறுப்பும் வேதனையும் மண்டிக் கிடக்கிறது . இது என்ன வாழ்க்கை ? எதற்காக இந்த ஓட்டம் ? யாருக்காக .. என ஆயிரம் கேள்விகள் சுத்தி சுழன்றடிக்கிறது ..பதில் சொல்ல முடியாத தனிமையின் வெறுமை ..

அறையில் சந்தடிகள் ஏதுமற்று இருக்கிறது ,பக்கத்து கடடிலில் சுதா இல்லை .அவள் இன்னும் இரவு வேலையில் இருந்து வரவில்லை ,குளியலறயில் இருந்து வரும் சினிமா பாடல் ஜெனிபரின் இருப்பை சத்தமாய் சொல்லுகிறது ...இவ்வளவு நேரத்தோடையா எழுந்து விட்டாள்? என நினைத்தபடி என் படுக்கையில் இருந்த படியே கைக் கணணியை ஆன் செய்கிறேன் , மெல்ல உயிர்ப்பெறும் திரையில் சலனமற்று படர்கிறது பார்வை .. இணையத்தின் தொடர்பு வருவதற்குள் இதயம் துடித்து எகிறி விழும் போல் இருக்கிறது..

அவசர அவசரமாக எம் தமிழ் செய்திகளின் மேல் மேயும் கண்கள் ..இன்றைய எறிகணை வீச்சுக்கு பலியானவர்களின் பெயர் விபரம் என்னும் எழுத்துக்களைக் கண்டதும் நடுங்கும் கைகளோடு அழுத்துகின்றேன்..
இரா.மகேந்திரன் (வயது 32),
செல்வராணி (வயது 52),
அ.சிறி (வயது 28),
சு.இராசதுரை (வயது 36),
சு.சோமசுந்தரம் (வயது 52),
ந.அருளம்மா (வயது 63),
ம.மகேஸ்வரி (வயது 24),
கே.சசிகலா (வயது 2)...
என நீண்டு கொண்டே போகும் பெயர்களை படித்து முடிக்கும் வரையில் ஒரு தடவை செத்து விடலாம் போல் தோன்றுகிறது ...

அப்படா யாரும் இல்லை ..ஒரு சின்ன பெருமூச்சு என்னையும் அறியாமல் வெளிவந்தது வெடிக்கிறது .. அடுத்து காயம் பட்டவர்களில் யாரும் இருக்கக் கூடாதே என வேண்டிய படி அவசரம் அவசரமாக இணைப்பை சொடுக்கும் முன் என்னையும் அறியாமல் கலங்குகிறது கண்கள் .

எதாவது நம்பிக்கை கீற்று தெரிந்து விடாதா என ஏங்கும் ஒவ்வொரு புலம் பெயர் ஈழத் தமிழனுக்கும் விடியல் என்னமோ இந்த இணையத்தில் வரும் செய்திகளில் தான் .. வானம் பார்க்கும் பூமி போல ஏக்கத்துடன் காத்திருக்கும் கொடுமை யாருக்கும் வரக் கூடாது .அடுத்த செய்திகளின் மேல் பார்வைகளை பதிய தொடங்க அழைப்புமணி அலறுகிறது .. வாசலில் தூக்க சோம்பலுடன் சுதா. "குட் மோர்னிங் ...உன்ன டிஸ்டப் பண்ணிவிட்டேனா ?" என சொல்லியபடி கைப்பையை எறிந்துவிட்டு படுக்கையில் சாய்கிறாள் .."அதெல்லாம் ஒன்றுமில்ல உள்ள வா " என்றபடி நான் கணனிக்கு முன் அமரவும் ஜெனிபார் வருவும் சரியாக இருந்தது . "அப்படி என்னதான் எப்ப பார்த்தாலும் நெட்ல இருகிரீயோ ? என்ன பாய் பிரண்ட் யாரும் கிடைச்சசா ?" என சொல்லவும் ,ஜெனிபார் அவளை முறைத்துக் கொண்டு "அறிவில்லையா உனக்கு ..நீதான் நேரம் காலம் இல்லாம அமெரிக்க டைம் ல வாழுகிறாய்,பக்கத்தில என்ன நடக்குது என தெரியாது உனக்கு என்றால் ,நம்ம ரூமுக்குள்ள என்ன நடக்குது என்று கூட தெரியாதா ?" எனத் திட்டியபடி என்னைப் பார்த்து "நீ தப்பா நினைக்காதே .." என்றாள்.துளிரும் கண்ணீரைப் அடக்கிக் கொண்டு சின்னப் புன்னகையை பதிலாய் தர .." ஒ சாரி டா ".. என்பவளுக்கு எதை நான் சொல்வது ?

பெற்றவர் ,உடன் பிறந்தவர் எங்க இருக்கினமோ ? உயிரோடு தான் இருக்கினமோ இல்லியோ எனக் கூட தெரியாது பைத்தியம் பிடிக்காத குறையாய் ஈழத்தில் உறவுகளை விட்டு புலம் பெயர்ந்தவர்களின் நிலைமை எம் எதிரிக்கு கூட வர கூடாது ..

அம்மா அப்பா என்ன செய்கினமோ ,எங்க இருகினமோ எதுவும் தெரியாது,கடைசியாய் கதைக்கும் போது கூட "இந்த மண்ணை விட்டு விட்டு எங்களால வர முடியாது பிள்ள .. நீ கவனமாய் இரு ,வடிவாக சாப்பிடு , ஒன்றையும் ஜோசிக்காத ...நாங்க பார்த்து இருப்பம்" என சொன்ன அம்மா ... இப்போது எங்கு இருக்கிறார் ? வேலை நிமித்தமாய் அயல் நாடு வாசத்தில் தனிமையில் கொடுமையை மறைக்க அறையை பகிர்ந்து கொண்ட நட்புக்கள் இவர்களிடம் என்ன சொல்லி புரியவைப்பேன் ?

என் இனம் ஊர் இழந்து ,உறவுகளைப் பிரிந்து , சொந்த நாடு இல்லாமல் அகதி என்னும் போர்வையில் அலைக்கழிந்து வாழ்வதை ... எப்படி புரிய வைப்பேன் ? கேட்டு ஊச்சுக் கொட்டி விட்டு , ஐந்தாவது நிமிடம் சினிமா நட்சத்திரத்தை சிலாகிக்கையில் ...புரியுமா இவர்களுக்கு எம் வலி ?


நித்தம் என்ன நடந்ததோ ,யாருக்கு என்ன ஆயிற்றோ என ஏங்கும் நிலைமை இவர்களுக்கு புரியாது ..நித்தம் செத்தவரில் யாரும் தெரிந்தவர், சொந்தங்கள் யாரும் இருந்திடக் கூடாது என பதறி , உடல் சிதறி கிடப்பவர்களில் அடையாளம் தேடும் கொடுமையை எப்படி சொல்லிடுவேன் ?

இரு துளி கண்ணீர் விழுந்து தெறிக்கையில் ,ஜெனிபர் , நான் சர்ச்க்கு போய் உனக்காக வேண்டுகிறேன் ,கவலைப் படாதே என சொல்லிச் செல்கிறாள் ..
உங்கள் மன்றாட்டம் மட்டும் தீர்த்து விடுமா என்ன எல்லாவற்றையும் ? என நினைத்துக் கொண்டு அடுத்த வரியில் பாய்கிறது கண்கள் ...

அவலத்தின் மத்தியில் ...

2 Comments »

விரீட்டு அழும் குழந்தையின் சத்தத்தால் பால் புட்டியை தேடிக் கொண்டிருந்த அமுதா, பொருட்கள் சிதற ஓடி வந்தாள் ...அதற்குள் ஏணையை அப்பாச்சி
ஆட்டத் தொடக்கி இருந்தார் .

"ஏன் பிள்ளை இவனுக்கு இன்னும் பால் குடுக்கவில்லையா ? "
இதோ அப்பாச்சி , சுடுதண்ணீ வைத்திருக்கிறன், இந்த ஈர விறகில புகைந்து கொண்டிருகிறது அடுப்பு... இந்த பால் புட்டிய எந்த பையில் வைச்சன் என்று ஜாபகம் வருகுதில்ல .. தேடுறன் ,அவனை ஒருக்கா பாருங்கோ ...

சரி பிள்ள , அவசரப் படாம பாரு ... என்று சொல்லிக் கொண்டு ஏணையிலிருந்து குழந்தையை எடுத்து மடியில் ஆட்டிக் கொண்டே தன் வெற்றிலை உரலை இடிக்கத் தொடங்கினார் ...

கிழவியின் அருகாமையும் , மரக் காற்றும் , குழந்தையை கொஞ்சம் சாந்தப் படுத்தியதோ என்னமோ , கொஞ்ச நேரம் அழுகையை மறந்து கிடந்தான் ..
தற்காலிகமாக இந்த மரத்தடியில் தரப்பாளைக் கொண்டு ஒரு இருப்பிடம் அமைத்து , மரத்திலையே ஒரு ஏணை கட்டி இருந்தாலும் மழையின் ஈரம் இன்னும் காயாததால் சேரும் சகதியுமாய் கிடக்கிறது நிலம் ...

பிள்ள இவன் குமார் என்ன போனவன் ?
'பங்கர்'குள்ள வெள்ளம் போய் தண்ணீ கணுக்கால் அளவிற்கு நிக்குது .. இவனிட்ட சொல்லி அதை வெளியில அள்ளி ஊத்த சொல்லு பிள்ள ...அந்தரம் ஆபத்துக்கு என்ன செய்கிறது ...
இவர் கடைக்கு போனவர் அப்பாச்சி...
பிள்ளைக்கு பால் பவுடர் முடியப் போகுது ..எங்காவது கிடைக்குமா எனப் பார்க்க போனவர் எனச் சொல்லிக் கொண்டிருக்க குமார் வரவும் சரியாக இருந்தது...

'இவருக்கு ஆயுசு நூறு தான்'..இதோ வரார் ..நீங்களே சொல்லுங்கோ .. என திரும்பி ,கட்டி வைத்திருந்த பொருட்கள் ஒவ்வொன்றாய் பிரிக்க தொடங்கினாள் அமுதா.
அத ஏனப்பா கலைகிற ...எப்ப வேணுமேன்டலும் ஓடனும் ..நீ பாட்டுக்கு எல்லாத்தையும் பிரிச்சு போட்டிருக்கிற...

இவனின்ட பால் புட்டிய எங்கயோ வைச்சிட்டன்.. அத தான் தேடுறன்.. நீங்க ஒருக்கா பாருங்களேன், நான் அடுப்பை ஒருக்கா பார்க்க ...

சரி நான் பாக்கிறன் நீ போ ...குழந்தையின்ர முக்கியமான சாமான்களை ஒரு பையில போட்டு வையேன்... எனச் சொல்லிக் கொண்டு பிரித்த பொருட்களை கட்டிக் கொண்டே தேட தொடங்கினான் ..

ஆமா ..அடிக்கிற 'ஷெல்' க பார்த்துப் பார்த்து கட்ட எங்க நேரம் ,எல்லாத்தையும் அள்ளிப் போடத்தான்சரியாயிருந்தது , நீங்க வேற ஊர் வேலை பாக்க போயிருவிங்க ,நானும் அப்பாச்சியும் தனிய என்ன செய்யிறது ...

சரி சரி புலம்பாத ...நான் பார்கிறன்...

என்ன தம்பி ! ஆஸ்பத்திரி பக்கம் போனீங்க போல ... எனச் சொல்லிக் கொண்டே கந்தையா அண்ணை சைக்கிளிலிருந்து இறங்கி அதை மரத்தில் சாத்தினார் ..
'ஓம்' அண்ணை , வாங்கோ ... நம்ம கதிரேசனோட தென்னக் காணியில தானே நேத்து கிபீர் போட்ட குண்டுகள் விழுந்தது ..அதில இருந்த சனங்கள் பாவங்கள் .. ஒரு வீட்டில அப்ப தான் சாப்பிட இருந்திருக்குதுகள் , இரண்டு பொம்பிள்ளைப் பிள்ளையள் செத்திட்டுதுகள் ...தாய்க்காரி நல்ல காயம் ... ரத்தம் தேடிக் கொண்டு இருந்தார்கள் அதுதான் குடுத்து விட்டு வந்தனான் ...


படுபாவி!நேரம் காலம் இல்லையா இவனுக்கு .. எவள் பெத்துவிட்டாளோ இங்க வந்து எங்க தலையில குண்டு போட்டு தள்ளுகிறான் ..எங்கட குஞ்சு குருமான்கள் எல்லாம் அநியாயமா கொண்டு தள்ளுரானே ..என சபித்துக் கொண்டு ஈர மண்ணை அள்ளி எறிந்தார் அப்பாச்சி ..

என்ன செய்கிறது அப்பச்சி ,நாம தான் தமிழனா பிறந்திட்டமே ...அது போதாதா எங்கிட உயிர் சல்லிக் காசுக்கு பெறுமதி இல்ல எண்டு நினைச்சுப் போட்டங்கள் ...ஆளாளுக்கு அள்ளி குடுக்கினம் ஆயுதத்தை .. எங்கள கொல்ல... இப்ப புதுசா ' கிளஸ்ரர்' குண்டு என்று சொல்லி கொத்துக் கொத்தாய் கொட்டுறான் என கந்தையா அண்ணரும் சொல்லிக் கொண்டு ,நான் போகப் போறான் என எழுந்திருக்க ..
இருங்கோ அண்ணா ,தேத்தண்ணீ குடிச்சிட்டு போகலாம் ..என அமுதா சொல்லிக் கொண்டு வந்தாள்..
இல்ல பிள்ள ,காணேல என்று மனுசி தேடத் தொடங்கிடுவா ..நான் பிறகு வாறன் ... வாறன் அப்பாச்சி என்று கிளம்பினார்..

இந்த சனியன் பிடிப்பாங்களுக்கு எவன் அள்ளிக் குடுக்கிறான் ...அவங்கள் எல்லாம் பிள்ளை குட்டி பெத்தவங்கள் தானே ... பாவிங்க ... ஒரு நிமிஷம் நினைச்சு பார்த்திருப்பங்களா செத்துக் கிடக்கிற உயிர்களை எனப் புலம்பிக் கொண்டே பாக்கு உரலை இடிக்கத் தொடங்கினார் .

கொஞ்ச நேர தேடலுக்கு பின் பால் புட்டியோடு குமார் வர ...கடையில எதாவது கிடைச்சுதாங்க ... அரிசி ,பருப்பு எதுவும் இல்ல .. எனக் சொல்லிக் கொண்டு தேநீர் குடுவையுடன் வந்தாள் அமுதா.
நான் போய் பார்த்துவிட்டு வாறன் ..நீ பிள்ளைக்கு பாலைக் குடு! எனக் கிளம்பிய குமாரை கண் மறையும் மட்டும் நின்று பார்த்துக் கொண்டு நின்றாள் அமுதா .

சிறிது நேரத்தில் 'ஷெல்' அடிக்கும் சத்தம் கேக்கத் தொடங்கியது ..
அப்பாச்சி ! நீங்க இவனைக் துக்கிக் கொண்டு 'பாங்கருக்க 'போங்கோ ..நான் பால் எடுத்துக் கொண்டு வாறன் .. எனச் சொல்லிக் முடிக்கும் முதல் விழுந்து வெடித்தது அடுத்தடுத்ததாய் இரண்டு 'ஷெல்'கள்..
சிதறிக் கிடக்கும் பொருட்களோடு , அப்பாச்சியின் பாக்கு உரல் சதை துண்டுகளோடு இரத்தத்தில் உறைந்து கிடக்க...சூட்டில் கருகிய பால் புட்டியோடு பிய்ந்து போன ஒற்றைக் கை , அது அமுதா தான் என உறுதிப் படுத்தியது ..குழந்தையற்ற ஏணை கந்தக நெடி வீசும் காற்றில் இன்னும் அசைந்து கொண்டிருக்கிறது .. ..


" பூக்குட்டி "

6 Comments »

மெதுவா வாங்க.எங்க பூக்குட்டி தூங்குகிறாள்.உங்க காலடிச் சத்தமோ , முச்சுக் காற்று சத்தம் கூட அவளை எழுப்பி விடக் கூடாது .. ஏனென்றால் அவள் துங்குவது ரொம்பக் குறைவு ..தூக்கத்தில் கூட எதாவது குருவியோடையோ இல்ல காயம் பட்ட நாய்க்குட்டியோடையோ கதைத்துக் கொண்டிருப்பாள் .இப்பதான் தூங்க தொடக்கி இருக்கிறாள் .. தப்பா நினைக்காதிங்க ...

கொஞ்சம் இருங்க , எனக்கு இருந்த மரக் காலோட கெதியா நடக்க ஏலாது..இந்த பக்கம் வாங்க ..உங்களுக்கு நிறையக் காண்பிக்கணும் நான் ..இதோ இது தான் எங்க பூக்குட்டிக்கு ரொம்ப பிடிச்ச ரோஜா செடி .எப்பவுமே இதோட கதைப்பாள் .அதுவும் தலையாடி தன்னோட கதைப்பதாக சொல்லிக் கொண்டிருப்பாள்.அதோ அந்த செடியில இருக்கிற வண்ணாத்துப்பூச்சி கூட அவளோட பெஸ்ட் பிரன்ட் தான்.
இத மரம் இருக்கே இது அவளோட பிறந்த நாளுக்கு நான்
அவள் கை தொட்டு வைச்ச மரம் ,எவ்வளவு பெரிசா வளந்திட்டுது..என்ன இன்னும் ஒரு பூக்கூட பூக்க காணோம் ..
இந்தோ பாருங்க இது தான் எங்க பூக்குட்டியோட சைக்கிள் ..அவள் ஆசை ஆசையா இந்த முற்றம் முழுக்க ஓடின இடம் இது ..அவள் ஓட பின்னாலேயே ஜிம்மியும் ஓடும் ..ஜிம்மி யாரா ? பூக்குட்டியோட குட்டி நாய்க்குட்டி. அவளுக்கு அது என்றால் உயிர் . அதுவும் தான் ,எப்பவுமே அவள் கூடவே திரியும் ..சொன்ன நம்ப மாட்டிங்க ..அவ நேர்சரி போனப்போ அதுவும் கூடவே போனது தெரியுமா?

ம்ம்ம் என்ன கேட்டிங்க ...இல்லங்க பூக்குட்டி நாங்க செல்லமா கூப்பிடுறது, ஏனென்றால் அவ எப்பவுமே இந்தப் பூக்களோடதான் இருப்பாள் ..அவ நியப் பெயர் பூஜா ... அவளைப் பத்தி இன்னும் சொல்லணுமா... நான் எத்தனை வருசமானாலும் சொல்லுவேங்க ...அவ்வளவு சொல்லலாம் ... எங்க பூக்குட்டிக்கு எல்லாமே பிடிக்கும், பிடிக்காதது எதுவுமே இல்ல,ஆறு வயசுக் குழந்தைக்கே உரிய அத்தனை குறும்பும் செய்வா , ஆனால் அதையும் மீறி அவளிடம் எதோ ஒன்று அதிகமாகவே இருக்கும்.

இந்த வீட்டோட தேவதை பூக்குட்டி அழகான ஓவியம் போல அத்தனை அழகு..எல்லாமே ஆச்சர்யம் அவளுக்கு ..ஆயிரம் கேள்விகள் வைத்திருப்பாள் . தாத்தா தாத்தா என்று என்னோடவே திரிவாள் .அவளோட ஒவ்வொரு அசைவும் அவ்வளவு அழகாக இருக்கும் ,தன் சின்ன கண்ணால நிறைய கதைப்பாள் ..எல்லோரையுமே பிடிக்கும் அவளுக்கு...எப்பவுமே முகத்தில சிரிப்பு இருக்கும் ..அழுதா கூட சிரிக்கிற மாதிரியே தான் இருக்கும் ...

அவளுக்கு எல்லாமே பிடிக்கும் ..மழை ,வானவில்,நிலா ,பூக்கள் ..எல்லாமே ..ஏன் செத்து போன எலிக்காக சாபிடமேயே கிடந்தாள் ,அது பாவம் என்று.சில நாள் கொட்டக் கொட்ட முழிச்சு இருப்பாள் ...நிலா பாவம் தனிய இருக்குது என்று சொல்லி,நாங்க தான் நட்சத்திரங்களைக் காட்டி சமாளிப்போம் .

ம்ம் பூக்குட்டிக்கு என்னச்சா ?.. ம்ம் அதையும் சொல்ல வைச்சிட்டுது இருந்த பாழப் போன யுத்தம் ..எப்பவும் போலத்தான் அண்டைக்கும் .. இதே முற்றத்தில இருந்து விளையாடி , நிலாவோட கதைத்து விட்டு,வழமைய விடக் கூடுதலாகவே நிறைய கேள்விகள் கேட்டு அடம்பிடித்து படுக்க போனால்.. பிறகு நாங்களும் கொஞ்ச நேரத்தில நித்திரைக்கு போய்விட்டோம் .. பாவி வந்து கொட்டி விட்டான் குண்டுகளை ...விமானச் சத்தம் கேட்டு எழும்பி வெளிய வாறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுது ... கொஞ்ச நேரத்தில கண் முழிச்சு எழும்ப பாக்கிறன் ,முடியல ..கால் பிஞ்சு போய்க் கிடக்கு .. இழுத்துக் கொண்டே பார்த்தால் எல்லாம் எரிஞ்சு கொண்டு இருக்குது .. என்ற பிள்ளயள் கண்டு பிடிக்க ஏலாத அளவுக்கு சிதைந்து போய்க் கிடக்கினம், என்ற பூக்குட்டி கட்டில்ல அப்படியே கிடக்கிறாள்.. என்ற செல்லத்துக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று போய் தூக்கிறன் ,இந்தக் கையெல்லாம் இரத்தம் ..அப்பவும் அவள் முகத்தில சிரிப்பு இருந்தது.. என் கண்ணுக்குள்ளேயே இப்பவும் தெரியுது ..என் கைய முகந்து பாருங்க ..என் பூக்குட்டியோட ரத்தம் ...

அவளுக்கு பிடிச்ச இருந்த தோட்டத்திலேயே அவளை புதைத்தேன் .. சொல்ல மறந்திட்டன் அவளுக்கு பக்கத்தில ஒரு மேடு பார்த்திங்களே ..அது ஜிம்மிய புதைத்த இடம் ... அதுவும் அவளோடவே போய் விட்டது ... இப்ப இரண்டு பேருமாக நிலாவுக்கு துணையிருப்பாங்க...பாவி பய நான் மட்டும் உயிரோட கிடக்கிறேன் ..இருந்த தோட்டத்துக்கும் ,பூக்குட்டிக்கும் காவலாய் மிச்சக் காலத்தையும் ஓட்டிடுவன்.. சரி உங்களுக்கு நேரமாகி இருக்கும் ...கவனமா போங்கோ ...

ஒரு நிமிசம் ,சத்தம் போடாம போங்க..ஏனென்றால் எங்க நாட்டில என் பூக்குட்டி மாதிரி நிறையப் பேர் .. தூங்கிக் கொண்டிருக்கினம் ... கவனமா பார்த்துப் போங்க ..

" கண்ணம்மா என்னும் அழகி "

0 Comments »

மொட்டைமாடிக் காற்றின் சிலுசிலுப்பில் கையில் இருந்த புத்தகத்தைக் கூட மறந்து மலை நேர மேகக் கூட்டங்களை ரசித்துக் கொண்டிருந்தேன். இந்த வானத்தில் தான் எத்தனை வர்ணங்கள் .. ஒவ்வொரு மேகக் கூட்டமும் ஏதேதோ உருவத்தோடு, இயற்கையின் படைப்புத்தான் எவ்வளவு அழகு ..பார்க்க பார்க்க சலிக்காது எனக்கு.. இன்றும் அப்படித்தான் நேரம் போவதே தெரியாமல் நின்ற என்னை .."ஐயோ அம்மா ... அடிக்காதிங்க அடிக்காதிங்க.. என்னும் பெண் குரலும் ... சிறு குழந்தையின் அழுகையும் இவ்வுலகத்திற்கு இழுத்து வந்தது..

எமது குடியிருப்பிலா இப்படிச் சத்தம் ... ஆச்சரியமாக இருக்கிறதே ..

ஏனென்றால் தொடர் வீடுகளைக் கொண்ட நாகரீக மக்கள் வாழும் அப்பார்மென்ட் இது .. பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் பெயர் கூடத் தெரியாத , நுனி நாக்கு ஆங்கிலத்தில் வாழ்க்கையை ஓட்டும் சென்னையின் உயர்ந்த மட்டத்தார் வசிக்கும் இடம் ..இங்கு இப்படி ஒரு குரலா... அவசரமாய் எட்டிப் பார்த்தேன் .. பக்கத்து காலி இடத்தில் புதிய கட்டிடம் ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன ... அந்த இடத்தில் ஒரு சிறு குடிசை ... அதில் தான் இந்த சத்தம் ... வாட்ச்மேன் போய் எதோ பேசுவது தெரிந்தது ,அதற்கு பின் சத்தம் ஏதுமில்லாமல் அமைதியானது...

எம் வீட்டு வேலைக்காரி செண்பகம் காலையில் வந்தால் இந்த அப்பார்மென்ட் செய்தியெல்லாம் ஒரு வரி விட்டாமல் சொல்லி விட்டுத்தான் தான் வேலையைப் பார்க்க போவாள் ..என் பாட்டிக்கு செண்பகம் வராவிட்டால் தலை வெடித்து விடும் ... என்னதான் அடுத்த வீட்டார் பெயர் தெரியாவிட்டாலும் ,அடுத்த வீட்டு விஷயம் தெரிந்து கொள்ள ஆவல் விடாது தானே ...

பத்திரிக்கை ஒன்றைப் புரட்டியபடி .. நானும் செண்பகத்தின் வார்த்தைகளில் தொலைந்து கொண்டிருந்தேன் ..அந்த பெண்ணின் பெயர் 'கண்ணம்மா' வாம் ... அவள் கணவன் இந்த புது கட்டிடத் பகுதியில் வேலை செய்பவனாம்... அதோடு இந்த பொருட்களுக்கு காவலாய் குடிசை போட்டு இங்கே தங்கி இருகிறார்களாம் .. ஒரு குழந்தையோடு....

'அம்மா நேத்திக்கு பூரா ,எல்லா வீட்டிலையும் இந்த கண்ணம்மா பத்திதாம்மா ஒரே பேச்சு ...ஒரே சத்தம் என்று கம்பளைண்டாம் ... 'என்று சொல்லிக் கொண்டிருந்தாள் ..

குடிகார புருசனின் அடியும் , கண்ணம்மாவின் சத்தமும் அடிக்கடி கேக்கத் தொடங்கியதும் , அதை வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கை ஆகிவிட்டது எமக்கு ....அவளின் குழந்தைக்கு ஒரு ஆறு வயசிருக்கும் , கறுப்பாய் துரு துறுவென்று இருப்பான் .அப்பார்மென்ட் குழந்தைகளுக்கு அவன் ஒரு வேடிக்கைப் பொருளாகி விட்டான் ...அவர்கள் இவனை விளையாட்டில் சேர்க்காததால் , அவர்களை ஓரமாக நின்று பார்ப்பதும் ,பின் தாயிடம் ஓடிச் செல்வதையும் பார்த்திருக்கிறேன் ..வறுமையின் அத்தனை அடையாளங்களோடு , அங்காங்கே ஓட்டுப் போட்ட புடவையுடன் கண்ணம்மா சுற்றி வருவது எம் குடியிருப்பு வாசிகளுக்கு முகச் சுழிப்பை ஏற்றிக் கொண்டிருந்தது..

அன்றும் அப்படித்தான் வழக்கம் போல ஒரு மாலை நேரம் .. அலுவலம் முடித்து திரும்புகையில் எதோ ஒரு புயல் அடித்து ஓய்ந்திருப்பது தெரிந்தது... வீட்டில் செண்பகத்தின் குரல் ..

என்ன துணிச்சல் தெரியுமாம்மா அந்தக் கண்ணம்மாவுக்கு ... என்று சொல்லிக் கொண்டிருந்தாள் ...
என்னாச்சு கண்ணம்மாவுக்கு... எனக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தேன் ..

அது வந்தும்ம்மா நம்ம பேங்க் ஆபிசர் பிள்ளை ...அது தாம்மா அந்த சந்தோஷ் தம்பி காலையில் துப்பரவு செய்ய திறந்து வைத்த சாக்கடை குழியில விழுந்து விட்டான் ...
ஐயய்யோ என்னாச்சு .....அவனுக்கு ஒன்னும் இல்லையே ...
பையனுக்கு ஒன்னும் இல்லம்மா எல்லாம் அந்தக் கருமாரி அம்மா தான் கண்ணம்மா உருவத்தில வந்து காப்பாத்தி இருக்கா...

சரி சொல்லு என்னாச்சு என்றேன் படபடப்போடு ...


நம்ம பசங்க எல்லாம் விளையாடிக் கொண்டிருக்க பந்து அந்தக் குழியில , விழுந்திட்டுதாம், அப்ப அதை எடுக்கப் போன சந்தோஷ் அந்தக் சாக்கடையில விழுந்திட்டானாம் .அந்தக் கண்ணம்மா பையன் இருக்கானில்ல அவன் சந்தோஷோட கையைப் பிடித்துக் கொண்டு கத்தி இருக்கான் ,அவன் சத்தத்தைக் கேட்டுக் எல்லோரும் ஓடி வந்திருக்காங்க , அதுக்குள்ள அவன் கையில இருந்து நழுவி விழுந்திட்டன் கீழே...
எல்லோரும் வாட்ச்மனைக் கூப்பிடு, போலிசுக்கு போன் செய் எடு சொல்லிக் கொண்டிருக்க ... கண்ணம்மா தான் ஓடி வந்தா பாருங்க... அப்படி ஒரு ஓட்டம் ...தான் பிள்ளையோட சத்தத்தைக் கேட்டு ஓடி வந்தவ ... சாக்கடையில இறங்கிவிட்டா ...பத்து ,பதினைந்து நிமிசம் இருக்கும் , அதுக்கு பிறகுதான் வாட்ச்மனே ஓடி வந்தான் ...
பிள்ளைய பிடிச்சுக் கொண்டு மேல வந்து பர பரவென்று துடைச்சு , மூச்சு குடுத்த பாருங்க , அவனும் அப்பத்தான் கண்ணைத் திறந்தான் ... எல்லோருக்கும் மூச்சே வந்துசும்மா ...
என்னதான் பதை பதைத்தாலும் யாரும் பக்கத்தில போக அருவருத்துக் கொண்டிருக்க ..அவளே தண்ணீர் மெண்டு வந்து குளிப்படி விட்டாள் பாருங்க ...அதுக்கு பிறகு தான் அவன் அம்மாகிட்டயே போனான் ...எல்லோரும் கண்ணம்மாவை புகழ , அவள் தான் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு ஒண்ணுமே நடக்காது போல சிரிச்சுக் கொண்டு போய்விட்டாள்....
அந்தக் கருமாரி அம்மனே நேரில பார்த்த மாதிரி இருந்துச்சும்மா அவளைப் பார்க்க ...
ம்ம் ... கண்ணம்மா இஸ் ரியலி கிரேட் தான் ...
என்ன அவளைப் பார்த்து முகச் சுழிப்பவர்கள் ,நாளையிலிருந்து புன்னகைக்க கூடும் ... நாளை அந்தக் குழந்தைகளோடு கண்ணம்மாவின் குழந்தையும் விளையாடலாம் .நாம் தான் அடிக்கடி மாற்றுகிறோம் எம் குணத்தை , வசதிக்கு , புகழுக்கு , பெருமைக்கு என ...
அவள் எப்பவுமே இப்படி தான் இருக்கக் கூடும் ...
அதனால அவளுக்கு ஒண்டும் பெரிதாய் வித்தியாசம் இருக்காது ...
என்று சொல்லிக் கொண்டு நான் அறைக்குள் நுழைந்தேன் .. கண்ணம்மா அதே வறுமையின் கோடுகளோடு இருந்தாலும் ,இன்று என் கண்ணுக்கு பேரழகியாய் தெரிந்தாள்..

“தோற்றுப்போய்…..”

2 Comments »

எப்போதும் இப்படித்தான் கார்த்திக்... அலுவலகம் விட்டு கார்த்திக் வரும் வரையில் காத்திருப்பது எப்பவும் போல நடப்பது தான் , ஆனாலும் இன்று நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது , இன்னும் காணவில்லை .
மனது ஒரு நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்க கைக்கடிகாரம் என்னோடு போட்டி போட்டு கொண்டிருந்தது .
வந்ததும் எதாவது ஒன்று சொல்லி சமாளிக்க அவருக்கு தெரியும் .

பாவம் தான் தன் அலுவலம் முடித்து அவசரமாக வந்து ,ஒரு சிரிப்பில் மன்னிப்பை சொல்லும் போது ,எல்லாம் மறைந்து சந்தோசம் மட்டுமே இருவருக்கும் மிஞ்சும் . அதிலும் பூஜாவைப் பார்த்தால் வேலைப் பழுவின் அலுப்பே தெரியாது ... இன்னும் கார்த்திக் வரக் காணோமே என சலித்துக் கொண்டே மணியைப் பார்த்தால் 5 ஆகிறது...பூஜா என்ன செய்கிறாளோ..என மனசு அங்களாய்க்கவும் கார்த்திக் வரவும் சரியாக இருகிறது..

எங்க லேட் ? எப்ப பார்த்தாலும் இப்படித்தான் நீங்க..நானாய் பஸ்ல போறேன் என்றாலும் வேண்டாமென்கிறீங்க..

பூஜா என்ன செய்கிறாளோ , சரியா சாப்பிட்டு தூங்கினாளோ தெரியவில்லை.. எனக் சொல்லிக் கொண்டே பைக் பின்னால் ஏறி இருக்க ,ஸாரி டா ..ராபிக் ஜாம் ல மாட்டிவிட்டன் அதுதான்..ஆமாம் உன்னை யார் வேலைக்கு போ என்று சொன்னது...
நீயாய் போகணும் என்று கிளம்பின.. இப்ப பார் பூஜாவை நினைத்து புலம்பிற்று இருக்கிறாய்.. என கார்த்திக்கும் தொடங்கினார் .

இது எப்போதும் நடக்கும் வாக்குவாதம் தான், அதுவும்கடைசியில் நீ வேலைக்கு ஒன்றும் போக வேண்டாம் ,வீட்டில இருந்து குழந்தையைப் பார், நான் இருக்கிறான் தானே உங்க இரண்டு பேரையும் பார்க்க என்பதோடு முடியும்..

நாம மட்டும் என்றால் கூட பரவாயில்லை..நாளைக்கு நம்ம மகளும் மற்றவர்கள் மாதிரி வாழ வேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டப் பட்டால் தான் முடியும், இந்த
சிற்றி லைப்ல உங்க சம்பளத்தை வைத்து எப்படி வாழ்றது..

சரி சரி விடு

எதோங்க ஆயா பாத்துப்பாங்க என்ற நம்பிக்கையில் தான் என்னால நிம்மதியாய் வேலை செய்ய முடியுது . இல்ல பூஜாவின் நினைப்பால் ஒரு வேலையும் ஆகாது.

ஏங்க போற வழியில நம்ம பிள்ளாயார் கோவிலுக்கு ஒரு நிமிசம் போயிற்று போகலாம்...

ஏய் இப்ப தானே லேட் ஆகுது என்று கத்தினாய்..பிறகென்ன ..

இல்லங்க அலுவலகத்தில புரமோசன் கிடைக்கலாம் என பேசுகினம் அதுதான்.. ஒருக்கா போயிற்றுப் போவோம் ...

இப்பவே குழந்தையை கவனிக்க நேரம் இல்லாம இருக்கு ..இது வேறயா... சரி சரி முறைக்காத.. நீ போய் கும்பிட்டு வா நான் வெய்ட் பண்ணுறன்..

கோவிலுக்கு போய் திரும்பிகையில்
பூக்காரியாம்மா வழக்கமான சிரிப்புடன்
வாம்மா..இந்தா பூ கொண்டு போமா..
உனக்கு முதல பூ குடுத்தாலே எனக்கு வியாபாரந்தம்மா, உன் கைராசி போல வருமா .. புன்னகையுடன் திரும்புகிறேன்

மனசுக்குள் எதோ பெரிய நின்மதி தோன்றினாப் போல் உணர வீடு அடைகிறோம்..

குழந்தை நல்ல தூக்கத்தில் இருந்தாள்... ஆயாவிடம் சாபிட்டாளா என விசாரித்துவிட்டு கொஞ்சம் பிரஷாகி காபி குடித்து முடிக்கவும் பூஜா எழுந்திருக்கவும் சரியாகிறது..


ஆசையாய் குழந்தையின் அருகில் சென்றால் ,
என்னிடம் வர மறுத்து அழுதபடி , ‘அம்மா’ என அழுது கொண்டு
ஆயாவின் மடியினில் போய் புதைகிறாள்..

முதன் ,முதலாய் விக்கித்து நிற்றேன்
எப்போதும் காதலாய் ‘சபாஷ்’ சொல்லும் கணவனும்..
நீ செய்தால் தப்பாய் இருக்குமா என பாராட்டும் மேல் அதிகாரியும் .......
என் பெண்ணின் முகத்துக்கு தொட்டதெல்லாம் துலங்கும் என அம்மாவின் பாராட்டும்...
உன் கைராசி தானாம்மா எனச் சொல்லும் பூக்காரியும்.. ..
கண் முன் நிழலாட என் அத்தனை சமர்த்தும் கரைந்து போய்...
தோற்றுப்போய் நிற்கின்றேன் என் மகளிடம்...